Tamil Sanjikai

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சியும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

இந்த சூழலில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா, பல்வேறு நாடுகளின் உதவியுடன் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணி (இந்திய நேரப்படி பிற்பகல் 12.30) அளவில் முடிவடைகிறது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், உறுப்பினர்கள் ஒருமித்த முடிவு அடிப்படையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழு முடிவு அறிவிக்கும். ஏற்கனவே, இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்த சீனாவின் மீதே தற்போது அனைவரின் பார்வையும் உள்ளது.

அல்கொய்தா தடைக்குழு விதிகளின்படி, எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு முடியும் வரை, எந்த எதிர்ப்பும் இல்லையென்றால், தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும். இதன்படி, சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்படுவார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டால், அவரது சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும். அவர் பயணங்கள் மேற்கொள்ளவும், ஆயுதங்கள் கிடைப்பதை அனைத்து நாடுகளும் உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

0 Comments

Write A Comment