Tamil Sanjikai

ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மை, இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாட்டு அரசு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையுடன் உலகின் எந்த வங்கிகளும், நிறுவனங்களும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரானில் கடந்த 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்புப் படையினர், ஈரானில் பல்வேறு சிறப்பு அதிகாரங்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment