Tamil Sanjikai

சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு மீது துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

போரை நிறுத்த குர்து- சிரியா ராணுவம் இணையும் என அண்மையில் ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப் படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும் அலேப்போ மாகாணத்தின் மன்பிஜ் நகரை துருக்கி தாக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதால் மன்பிஜ் நகரம், ரக்பா மாகாணத்தில் உள்ள தப்கா நகரங்களில் சிரியா தனது ராணுவத்தை குவித்து, ராணுவ தளத்தையும் அமைத்து தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசுப்படைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளது. இதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி அரசு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்துவதாக குர்திஷ் படைகள் குற்றம் சாட்டியுள்ளது.

0 Comments

Write A Comment