Tamil Sanjikai

தனி நாடு கேட்கும் குர்திஷ் இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என கருதுகிறார் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் . குர்திஷ் இனப் போராளிகளை ஒழித்துக்கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை பயன்படுத்திக் கொண்டு குர்திஷ்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார்.

இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்திஷ்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 4 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன் குர்துக்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

குர்திஷ் படைகள் மீதான துருக்கியின் ராணுவத் தாக்குதலுக்கு ஈரான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

துருக்கியை ராணுவ தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்து உள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சியில் டிரம்ப் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனை விரைவில் அங்காராவுக்கு அனுப்பி வைக்கிறார்.

டிரம்புடன் போனில் பேசிய துருக்கிய தலைவர் தயீப் எர்டோகன், எல்லை நகரமான கோபனியைத் தாக்க மாட்டேன் என்று உறுதியளித்ததாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறினார்.

துருக்கி உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து சிரியாவில் குர்திஷ் படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா விரும்புகிறது என்று ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார் என மைக் பென்ஸ் கூறினார்.

0 Comments

Write A Comment