Tamil Sanjikai

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு விரோதமனது என்றும், எனவே அந்த உத்தரவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவுடனான மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா. மேலும் கடந்த மாதம் 9-ஆம் தேதி அன்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனை எதிர்த்து ரணில் விக்கரம சிங்கே உள்ளிட்ட 13 பேர் நவம்பர் 12 ஆம் தேதி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நவம்பர் 13-ஆம் தேதி இடைக்கால தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நளின் பேரார தலைமையிலான அமர்வு, நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது.

மேலும் வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றது. இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவுக்கு வந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை அன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றனர்.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க மூன்றில் இரு பங்கு எம்.பிகளின் ஆதரவு தேவை என்ற சட்ட விதிகளை சுட்டக் காட்டிய நீதிபதிகள், இலங்கை அதிபரின் செயல் சட்ட விரோதமானது என்றனர். நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் வரை அதனை கலைக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தலைமை நீதிபதி நளினி பேரேரா தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, பவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டீஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோரும் ஒருமித்து இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment