Tamil Sanjikai

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அரசியல் சூழ்நிலை பரபரப்பாக காணப்படுகிறது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்துக்கு வந்தது. பதவியிறக்கம் செய்யப்பட்ட ரணில், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

225 எம்.பி.க்களில் 95 பேரின் ஆதரவு மட்டுமே ராஜபக்சேவுக்கு கிடைத்ததால் , பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேனா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் . அதன் பின் , நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு கையெழுத்திட்டார். ஜனவரி 5-ம் தேதி நாடு தழுவிய பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிய அரசு ஜனவரி 17-ம் தேதி பொறுப்பு ஏற்கும் என்றும் அரசாணையில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபரின் அறிவிப்பை அடுத்து, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலை சந்திக்க தங்கள் கட்சி தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் அதிபரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் ரணில் அமைச்சரவையில் இடம்பெற்ற மங்கள சமரவீரா தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் மக்களின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் என்றும், நிலைத்தன்மையை ஏற்படுத்தும் எனவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

0 Comments

Write A Comment