Tamil Sanjikai

ஜி 20 நாடுகளின் மாநாட்டிற்காக அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் ஏர்ஸ் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற அமைதிக்கான யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாநாட்டின் போதே ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆன்டணியோ குட்ரெசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். போலந்து நாட்டில் நடைபெற உள்ள சுற்றுச்சூழல் குறித்த மாநாட்டு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

இதே போன்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பில் சால்மானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சவுதி அரேபியா செய்ய உள்ள முதலீடுகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஜி-20 மாநாட்டின் போது இந்தியா தரப்பில் முன்வைக்க உள்ளவை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பொருளாதார குற்றம் இழைத்து விட்டு, தப்பி ஓடி, பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தோரை தண்டனைக்கு உள்ளாக்குவது குறித்து ஜி 20 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தையும், ரஷ்யா, சீனா அதிபர்களுடன் மற்றொரு முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் மோடி ஈடுபட்டார்.

இதே போன்று அர்ஜெண்டினா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதே போன்று அமெரிக்கா - மெக்சிகோ இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதனிடையே பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டமும் பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்றார்.

வளரும் நாடுகளின் நலனுக்காக ஒரே குரலில் பிரிக்ஸ் நாடுகள் முழக்கமிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பயங்கரவாதம், இனவாதம் போல பொருளாதார குற்றங்களும் உலக நலனுக்கு எதிரானது என அவர் குறிப்பிட்டார். கறுப்பு பணம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் கைகோர்த்து செயல்பட வேண்டுமென மோடி கோரிக்கை விடுத்தார்.

ஜி 20 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மற்றும் வர்த்தக, வரி அமர்வில் கலந்து கொண்ட மோடி, 9 அம்சங்களை வலியுறுத்திப் பேசினார். GFX in பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு மற்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏனைய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்றவற்றில் சர்வதேச நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க `வேண்டும். பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் பரிமாற்றங்களுக்கு, சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments

Write A Comment