Tamil Sanjikai

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து வந்த 370வது சட்டப்பிரிவை நீக்குவது, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது உள்ளிட்ட மசோதாக்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளை அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்தியாவுடனான தூதரக உறவை துண்டித்ததுடன், ரயில் மற்றும் பஸ் சேவைகளை முடக்குவது உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகளையும் அந்நாடு மேற்கொண்டது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளை ரஷ்யா ஆதரித்துள்ளது. காஷ்மீரின் நிலையில் மாற்றம் செய்துள்ளது இந்திய அரசின் அரசியலமைப்பிற்குள் அடங்கியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சிக்கல்களை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்திற்கு கட்டுப்பட்டு சுமூகமாக இருநாடுகளும் தீர்த்துக்கொள்ளும் என நம்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தின் மூலம் நிலைமை மோசமாகாமல் இருநாடுகளும் தடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது ரஷ்யா.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பு நாடுகளில் முதல் நாடாக ரஷ்யா, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment