Tamil Sanjikai

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ‘ஜி-20’ உச்சி மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் ஒசாகா புறப்பட்டு சென்றார். அவருடன் தூதுக்குழுவினரும் சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை ஒசாகா கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை, மோடி சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பிரதமர் பதவி ஏற்ற நிலையில் மோடி, ஷின்ஜோ அபேயை சந்தித்தது இதுவே முதல் முறை.

‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்காக ஒசாகா சென்றடைந்த இந்திய தூதுக்குழுவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக ஷின்ஜோ அபேவுக்கு மோடி நன்றி தெரிவித்தார். அக்டோபர் மாதம் நடக்க உள்ள ஜப்பான் மன்னர் நருஹிட்டோவின் முடிசூட்டு விழாவில் இந்தியா சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வார் என்றும் அவர் கூறினார்.

ஜப்பானில் ரெய்வா (ஒழுங்கு மற்றும் நல்லிணக்கம்) என்ற புதிய சகாப்தம் தொடங்கி இருப்பதற்காக ஷின்ஜோ அபேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலக பொருளாதார நிலவரம், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் விவகாரம், பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடியும், ஷின்ஜோ அபேயும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் இயக்குவதற்காக ரூ.90 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிற அதிவேக ரெயில்தடம் பற்றியும் இருவரும் விவாதித்தனர். வாரணாசியில் கூட்ட அரங்கு ஒன்று கட்டுவது குறித்தும் அவர்கள் பேசினர்.

பேரழிவு மேலாண்மை, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் ஜப்பான் அனுபவம் பெற்றுள்ளதால், இந்த பிரச்சினையில் ஜப்பானின் ஆதரவு இந்தியாவுக்கு முக்கியம் என்று ஷின்ஜோ அபேயிடம் மோடி கேட்டு கொண்டார்..

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பிரச்சினையில் முந்தைய ஜி-20 உச்சி மாநாடுகளில் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பற்றி ஷின்ஜோ அபே சுட்டிக்காட்டினார்.ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் விவகாரத்தை ஜி-20 உச்சி மாநாடு விவாதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்ற விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான செய்தியை விடுக்க வேண்டும், உலக வர்த்தக பிரச்சினைகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷின்ஜோ அபே குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி இன்று டிரம்பை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது, ‘எச்-1பி’ விசா விவகாரம், வர்த்தக பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும் ரஷிய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment