ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பிஸ்கெக்கில், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார்.சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு நல்லுறவுகள் குறித்தும், அதனை மேம்படுத்துவது பற்றியும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
மேலும் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாம் முறையாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றதற்காக, தமக்கு வாழ்த்து தெரிவித்த ஜி ஜிங்பிங்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.
அத்துடன், நாளை மறுதினம் (ஜூன் 15) பிறந்த நாள் கொண்டாடவுள்ள சீன அதிபருக்கு இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துகளையும் நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார். அப்போது, இந்தியாவுக்கு வர வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை, சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஏற்று கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியா வர ஒப்பு கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷிய அதிபருடன் சந்திப்பு : சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு நட்புறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
0 Comments