Tamil Sanjikai

உலகளாவிய அமைதி, நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சியோல் அமைதிப் பரிசு தென்கொரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

1988ஆம் ஆண்டில், 160 நாடுகள் பங்கேற்று, வெற்றிகரமாக சியோல் ஒலிம்பிக் நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், சியோல் அமைதிப் பரிசு ஏற்படுத்தப்பட்டது. உலகளாவிய அமைதி, நட்புறவை ஊக்குவிக்கும் வகையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசை சியோல் நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

தமது நாட்டிற்கும், உலகிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களித்ததற்காகவும், மண்டல மற்றும் உலகளாவிய அமைதியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக, விருது வழங்கும் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சியோல் அமைதிப் பரிசு, தனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கிடைத்தது அல்ல என்றும், 130 கோடி மக்களின் ஆற்றலால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா ஈட்டிய வெற்றிக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் கிடைத்த விருது என்று குறிப்பிட்டார்.

உலகமே கைகோர்த்து ஒன்றிணைந்து, தீவிரவாத கட்டமைப்புகளை முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அப்படிச் செய்வதன் மூலமே வெறுப்புக்கு பதில் நல்லிணக்கத்தை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.

0 Comments

Write A Comment