Tamil Sanjikai

சவுதி மன்னரின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சவுதி அரேபியா சென்றார். சவுதியின் தலைநகரமான ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் கலந்து கொண்டார். பின்னர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசினார்.

சவுதி அரேபிய பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள ஊடகத்திற்கு மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா- சவுதி அரேபியா நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்தியாவில் சவுதி அரேபியாவின் முதலீடுகளை காண ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்த மோடி, வாங்குவது - விற்பது என்பதோடு நில்லாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி இருநாட்டு உறவுகள் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய, ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீடு குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் டாலரை, எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் இந்தியா முதலீடு செய்யும். சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில், உலகளவில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், 2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை 7.30 மணியளவில் டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

2016-ல் பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் சவுதி மன்னர் இந்தியா வந்தார். தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment