Tamil Sanjikai

காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது.

இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்- மந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், காஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பிவந்ததால், மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்தது.

அதேநேரம் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் காஷ்மீரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளும் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடவும், அங்குள்ள மக்களை சந்திக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு செல்வதாக அறிவித்தனர்.

இதை அறிந்ததும் மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனரகம், எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் வருகையை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இன்னும் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்வதால் எதிர்க்கட்சிகளின் வருகை இயல்பு நிலை திரும்புவதற்காக அரசு எடுத்துவரும் முயற்சிகளில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும் மாநில அரசு தெரிவித்தது.

ஆனாலும் திட்டமிட்டபடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சி பிரதிநிதிகள் நேற்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தேசிய மாநாட்டு கட்சி மஜித் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் தினேஷ் திரிவேதி, ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா ஆகிய 8 கட்சி பிரதிநிதிகள் 11 பேர் இந்த குழுவில் புறப்பட்டு சென்றனர்.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் சென்று இறங்கியதும் அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியே செல்லவும், நகருக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. எதிர்க் கட்சி தலைவர்களை பத்திரிகை யாளர்கள் சந்திக்கவும் போலீசார் அனுமதி மறுத்தனர்.

சில மணி நேரம் விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்ட அவர்கள், பின்னர் மாலையில் டெல்லிக்கு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “ஜம்முவில் பல கல்லூரிகள், பள்ளிகள் 5-ந் தேதியில் இருந்தே மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றால், என்னை ஏன் என் சொந்த மாநிலத்தை பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்?” என்றார்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கு தெரிந்த தலைவர்களையே காஷ்மீருக்குள் அனுமதிக்க மறுப்பது வாக்காளர் களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்பது போன்ற அரசியல் கட்சிகளின் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்” என்று கூறியுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மீது போலீசார் தவறாக நடந்துகொண்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார் கூறியுள்ளது.

ஏற்கனவே குலாம்நபி ஆசாத் 2 முறையும், சீதாராம் யெச்சூரி ஒரு முறையும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி காஷ்மீர் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியதற்கு, அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீருக்கு வந்து நேரில் நிலைமையை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்க தயாரா? என்று சவால் விட்டார். ராகுல் காந்தியும் அந்த சவாலை ஏற்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருவதாக கூறியதும், அதனை கவர்னர் ஏற்க மறுத்தார்.

0 Comments

Write A Comment