Tamil Sanjikai

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெற செய்ய ரஷியா உதவியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஓன்று அமைக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டு கால விசாரணைக்கு பிறகு அக்குழு தனது அறிக்கையை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் சமீபத்தில் தாக்கல் செய்தது.

முல்லரின் அறிக்கையை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், துணை அட்டார்னி ஜெனரல் ரோசன்ஸ்டெயின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து, முல்லரின் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து 4 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கடிதத்தில் வில்லியம் பார் கூறியிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் முல்லரின் அறிக்கையில் இல்லை.

அதேபோல் டிரம்ப் சட்டவிரோதமாக செயல்பட்டு நீதியை தடை செய்ய முயன்றாரா? என்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

முல்லரின் அறிக்கையில் டிரம்ப் குற்ற செயலில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படாத அதே சூழ்நிலையில், அவர் குற்றமற்றவர் என்று எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், “கூட்டு சதியும் இல்லை, நீதிக்கு எவ்வித தடையும் இல்லை. முழுமையாக மற்றும் ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

முல்லரின் விசாரணை பழிவாங்கும் நடவடிக்கை என தொடர்ந்து விமர்சித்து வந்த அவர் மற்றொரு டுவிட்டர் பதிவில், “இது மிகவும் அவமானத்துக்குரியது. நம் நாடு மற்றும் ஒரு நேர்மையான ஜனாதிபதி இதுபோன்ற விஷயங்களை கடந்து செல்வது அவமானகரமானது” என தெரிவித்தார்.

இதற்கிடையில், முல்லரின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் டிரம்பை குற்றமற்றவர் என அட்டார்னி ஜெனரல் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே முல்லரின் முழுமையான அறிக்கையை உடனடியாக வெளியிடுவதோடு, விசாரணை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே சமயம் முல்லரின் விசாரணை எப்படி தொடங்கியது என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென டிரம்பின் வக்கீல் ரூடி ஜியுலானி, கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments

Write A Comment