காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டார் என டொனால்டு டிரம்ப் பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை மறுத்த இந்திய அரசு, இது உள்நாட்டு விவகாரம் என அமெரிக்காவிற்கு பதிலுரைத்தது. இதனையடுத்து தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் விலகிக்கொண்டார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகிறது என்றது. இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி இந்தியாவுக்கு எதிராக மற்ற நாடுகளை அணி திரட்ட பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் தான் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்காதால் பெரும் பின்னடைவுதான் மிஞ்சியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், காஷ்மீரை இந்தியா அடக்குமுறைக்குள் வைத்துள்ளதாகவும் அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதுதொடர்பாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்த்தன் சிருங்லா ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். இப்போது, இந்தியா அதனை ஏற்காத நிலையில், இனி காஷ்மீர் விவகாரத்தில் நான் தலையிடப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெளிவுபடக் கூறிவிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பதுதான் அமெரிக்கா நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் கொள்கை. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டும் பேச்சு நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அமெரிக்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது என்று கூறிவிட்டார். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இது பெரும் பின்னடைவாகும்.
0 Comments