இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவர், மசூத் அசார். இவன், நாட்டையே உலுக்கிய பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக விளங்கி வருகிறான். அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் இந்தியா பலமுறை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இதற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்த்து தடை செய்யும் தீர்மானம் கொண்டு வரும் போதெல்லாம் சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் செய்து வருகிறது.
காஷ்மீரின் புலவாமாவில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழக்க காரணமான தற்கொலைப்படை தாக்குதலுக்கும் மசூத் அசாரே பொறுப்பேற்று இருந்ததால், அவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் சேர்க்க பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுத்தன.
ஆனால் இந்த முறையும் சீனாவே இடைஞ்சலாக வந்தது. மசூத் அசாருக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா பொருளாதார தடை கமிட்டி முன் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கடந்த 13-ந் தேதி தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது.
இந்தியாவில் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வரும் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க விடாமல் தடுக்கும் சீனாவின் நடவடிக்கை இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளையும் எரிச்சலடைய வைத்தது. அத்துடன் மசூத் அசாருக்கு எதிராக சர்வதேச நாடுகளின் அழுத்தமும் அதிகரிக்க தொடங்கியது.
எனவே மசூத் அசாருக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்பியது. அதன்படி மசூத் அசாருக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது. 1267 தடை கமிட்டிக்கு பதிலாக பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் 1267 தடை கமிட்டியில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதை பயன்படுத்தியே சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால் நேரடியாக தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு எந்த வகையிலும் ஆட்சேபனை எழுப்புவதற்கான வழிமுறைகள் வழங்கப்படாது.
அந்தவகையில் மசூத் அசாருக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகவே வரைவு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்மானத்தில் புலவாமா தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவது எப்போது? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக பொருளாதார தடை, ஆயுத தடை மற்றும் போக்குவரத்து தடைகள் விதிக்கப்படுவதுடன் அவரது பெயர் ஐ.நா.வின் கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்படும்.
அதேநேரம், இந்த வரைவு தீர்மானம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டாலும் அது ஓட்டெடுப்புக்கு வரும் போது, சீனாவின் வீட்டோ அதிகாரத்தையும் எதிர்கொண்டாக வேண்டும். இதனால் இந்த தீர்மானம் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
இந்த விவகாரத்தில் கவனமுடன் செயல்படுமாறும், வரைவு தீர்மானத்தை வலுக்கட்டாயமாக தாக்கல் செய்வதை நிறுத்துமாறும் அமெரிக்காவை சீனா கேட்டுக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments