Tamil Sanjikai

அணு ஆயுத கைவிடல் நடவடிக்கையாக கலைக்கப்பட்ட ஏவுதளத்தை வடகொரியா மீண்டும் அதிவேகத்தில் கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதம் தாங்கி அமெரிக்க நிலப்பகுதியைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை 2017-ல் வடகொரியா சோதனை செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அமெரிக்க-வடகொரிய சந்திப்பில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி அணு ஆயுதக் கைவிடல் நடவடிக்கையாக டாங்சங்-ரி ((Tongchang-ri ))-யில் அமைக்கப்பட்ட ஏவுதளத்தை சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் களைத்தது.

இந்நிலையில் அண்மையில் வியட்நாமில் அமெரிக்க-வடகொரிய அதிபர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் ஏவுதளத்தை வடகொரியா மீண்டும் அதிவேகத்தில் கட்டமைத்து வருவதாகவும், அங்கு எஞ்சின் பொருத்துதல், கதவுகள், மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றதாகவும் தென்கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு 2 கிரேன் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து அமெரிக்க-வடகொரிய சமாதான முயற்சியில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட் ஏவுதளம் கட்டமைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment