Tamil Sanjikai

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் , இருநாடுகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.

சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதாகவும், அதனால், துருக்கி எல்லையில் இருக்கும் தங்களது படையினை வாபஸ் வாங்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வரும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரான குர்தீஷ் மக்கள் படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டு தான் எங்களது வீரர்களை நாங்கள் வாபஸ் வாங்கினோம். ஆனால், தற்போது, குர்தீஷ் மக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், இதற்கு மூன்று தீர்வுகளே எங்களிடம் உள்ளன.

1. எங்கள் ராணுவத்தை மீண்டும் அப்பகுதிக்கு அனுப்பி குர்தீஷ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தலாம்,

2. பொருளாதார ரீதியாக துருக்கி அரசை தாக்கி, பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்,

3. இருநாடுகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளலாம்.

இதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ளதை குறித்து நான் ஏற்கனவே துருக்கியை எச்சரித்து விட்டேன். மீண்டும் ராணுவத்தை அப்பகுதிக்கு அனுப்ப அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, நான் எப்போதும் கூறுவது போல, சமாதானமான பேச்சு வார்த்தை தான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், துருக்கியின் இந்த செயலை, சர்வதேச நாடுகள் அனைத்தும் கடுமையாக கண்டித்து வரும் நிலையில், மனித நேயத்துடன் நடந்துக்கொள்ளுமாரும், இந்நிலை தொடர்ந்தால், வேறு விதமான பெரும் விளைவுகளை துருக்கி சந்திக்க நேரிடும் என்று இந்தியாவும், துருக்கியை கடுமையாக எச்சரித்துள்ளது.

0 Comments

Write A Comment