Tamil Sanjikai

ஒப்பந்தத்தை மீறி, எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததா என்பது குறித்து தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று இந்தியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையை சேர்ந்த எஃப்-16 விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தன. இந்திய விமான படை பதில் தாக்குதல் நடத்தியதில், ஒரு எஃப்-16 விமானம் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அப்போது எஃப்-16 விமானம் ஏவிய நடுத்தர இலக்கு ஏவுகணையான AIM-120 AMRAAM மட்டும் இந்திய பகுதிக்குள் விழுந்துவிட்டது.

மேலும் எஃப்-16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளன. முப்படைகளின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் எஃப்-16 விமானங்களை பயன்படுத்தியுள்ளது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு தாங்கள் எஃப்-16 விமானம் எதையும் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு காரணம், எஃப்-16 விமானங்களை தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு எந்த நாட்டிற்கும் எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியவையாகும். இந்நிலையில், இதுகுறித்த தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் ஃபாக்னர் ((Lt Col Kone Faulkner)) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட, பயன்பாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்த விவரங்களை ஒப்பந்தப்படி தெரிவிக்கக் கூடாது என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கோன் ஃபாக்னர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment