உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன.
அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இதற்கு இடையூறாக இல்லாமல்சுமூகமாக தொடர்ந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இப்போது அவர்கள் மீண்டும் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த சந்திப்பு சென்னையை அடுத்துள்ள சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானம் மூலம் பகல் 1.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவருடன் 200 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரும் வந்தடைந்தனர்.
மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றார்கள்.
தமிழக பாரம்பரியப்படி கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சீன அதிபர் பயன்படுத்தும் ஹாங்கி 5 எல் ரக பிரத்யேக காரில் ஏறி கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ஜி ஜின் பிங் சென்றார்.
இதனையடுத்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.
தங்களது நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சீனர்களும் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி விமான நிலையம் உள்ள ஜிஎஸ்டி சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
0 Comments