Tamil Sanjikai

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக, 2016, ஜூன் 23ஆம் தேதி, அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வந்தது.

வாக்கெடுப்பு நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, வரும் 29ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) உள்ளது. இந்த வெளியேற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2018ம் ஆண்டு நவம்பரில், பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்பிகளும், ஆதரவாக 202 எம்.பி.களும் வாக்களித்தனர்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அந்நாட்டு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டு தான் இதற்கு காரணம். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் சிறுசிறு மாற்றங்களுடன், இன்று நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் 29ம் தேதி பிரிட்டன் வெளியேற உள்ள நிலையில், பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இன்று இரண்டாம் முறையாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், ஒப்பந்தத்திற்கு எதிராக 391 எம்.பி.களும், ஆதரவாக 242 எம்.பி.களும் வாக்களித்தனர். இதனால், இரண்டாவது முறையாக நடந்த வாக்கெடுப்பில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment