Tamil Sanjikai

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான அனுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்தது.

இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, ஈரானுக்கு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்து போர் மூளும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி வெற்றிக்கு பிறகு முதல் முறையாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரான் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக் உடனான போரின் போதுகூட இதுபோன்ற சர்வதேச பிரச்சினைகளை ஈரான் எதிர்கொள்ளவில்லை என்றும், இருந்த போதிலும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உரிய தீர்வை காண முயற்சிப்போம் எனவும் ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment