Tamil Sanjikai

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் நிகோலா டவுன்சென்ட் (வயது 50). இவரது தந்தை டெரன்ஸ் (வயது 78). நிகோலாவிற்கு தனது தந்தை மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் திடீரென கையில் கிடைத்த டி.வி. ரிமோட் ஒன்றை எடுத்து வீசியுள்ளார். அது அவரது தந்தையின் தலையில் பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது காயத்திற்கு மருந்து போடுவதற்காக சமையலறைக்கு செல்ல முயற்சி செய்துள்ளார்.

அவரை இடையிலேயே தடுத்து நிகோலா கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் டெரன்சின் நெஞ்செலும்புகள் பல உடைந்து போயுள்ளன. பல்வேறு காயங்களால் பிரான்கோநிமோனியா என்ற பாதிப்பு ஏற்பட்டு பின்னர் டெரன்ஸ் உயிரிழந்து விட்டார்.

ஆனால் இறப்பதற்கு முன் டெரன்ஸ் தனது மகளை காக்கும் வகையில் கூறும்பொழுது, தனது தலை சுவரில் மோதி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

அதேவேளையில், தனது உறவுக்காரரான கேம்ப்பெல்லிடம், நிகோலா தொலைபேசியில் பேசும்பொழுது டெரன்சை தாக்கிய விவரம் பற்றி கூறியுள்ளார். அவர் போலீசாரிடம் இந்த தகவலை கூறி விட்டார்.

இந்த சம்பவம் பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்திற்கு சமீபத்தில் நீதிமன்றம் நிகோலாவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இன்னும் சில நாட்களில் அவருக்கு தண்டனைக்கான விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

0 Comments

Write A Comment