Tamil Sanjikai

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்களான னித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களான ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

இதன்பின் நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.

இதனை தொடர்ந்து இலங்கையில் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் இன்று ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்த முயற்சியில் வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஷாங்க்ரிலா 5 நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள்.

கொழும்புவில் தற்கொலை தாக்குதல் நடத்திய சீலவனின் மனைவி மற்றும் அவரது சகோதரி கொழும்பு நகரில் நடந்த வேறொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியாகியுள்ளார். அவர்கள் உருகொடவட்டாவில் நேற்று கடைசியாக நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர்.

0 Comments

Write A Comment