Tamil Sanjikai

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்தான புதிய பயண அறிவுறுத்தலை அமெரிக்க அரசு, வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளை வகைப்படுத்தப்பட்டு பட்டிலிடப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3-வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4-வது நிலையில் வைத்துள்ளது.

பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன. பயங்கரவாத தாக்குல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது.

0 Comments

Write A Comment