Tamil Sanjikai

நேற்று கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இந்நிலையில், நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்புகளால், அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, புனித செபஸ்தியார் தேவாலயத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், “நமது தேவாலயத்தில் குண்டு வெடித்துள்ளது. இங்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், நேரில் வாருங்கள், உதவுங்கள்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன. இந்த சொகுசு ஓட்டல்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ஓட்டல்கள் ஆகும்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள்.ஆக, மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 215 பேர் பலியானதாக நேற்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 500- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களில் 5 இந்தியர்களும் அடங்குவர்.

0 Comments

Write A Comment