நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 5 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலிய நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தான் நடத்திய தாக்குதலை கேமரா மூலம் பதிவு செய்ததோடு, அதை நேரலையாக தனது முகநூலில் ஒளிபரப்பு செய்தார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகள் நேரலையாக பரவி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நேரடி காட்சிகளை பரப்பிய குற்றச்சாட்டில் 18-வயது இளைஞர் ஒருவரை நியூசிலாந்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் மசூதியின் புகைப்படங்களை வெளியிட்டு சில வாசங்களை வெளியிட்டதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட நீதிபதி மறுத்துவிட்டார். குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
0 Comments