கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகள் இலங்கை தமிழர்களான நடேசன்-பிரியா தம்பதிகளின் வீட்டில் ஒரு அதிகாலை சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பிரியாவின் விசா காலாவதியானது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரியா அவரது கணவர் நடேசன் மற்றும் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வைத்து பிறந்த குழந்தைகளான கோபிகா மற்றும் தருனிகா ஆகியோர் அதிகாரிகளால் அவர்களது வீட்டிலிருந்து தடுப்பு காவலில் எடுக்கப்பட்டனர்.
பிரியா -நடேசன் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக அந்நாட்டின் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் அவர்களது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த இலங்கை தமிழ் தம்பதியினரின் பிரச்ச்னையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை தலையிட வலியுறுத்தி 141,000 பேர் கையெழுத்திட்டு ஒரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்ட்து.
இதற்கிடையே வெள்ளி மதியம் நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜான் மிடில்டோன் பிரியா-நடேசன் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால் பிப்பிரவரி 1ம்தேதி மாலை 4மணி வரை பிரியா-நடேசன் தம்பதியினரை நாடு கடத்துவதர்க்கு தடை விதிப்பதாகவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதர்க்கு முன்பு வரை கடந்த நான்கு வருடங்களாக இலங்கை தமிழர்களான பிரியா -நடேசன் தம்பதி ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் வசித்து வருகின்றனர்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வந்த போது, தமிழர்களான நடேசனும், பிரியாவும் ஆஸ்திரேலியாவுக்கு வெவ்வேறு காலங்களில் தனித்தனியாக தோணிகளில் வந்து சேர்ந்தனர். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து பிரியா, நடேசனை சந்தித்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
பிரியா தனது வழக்கறிஞர்களிடம் தனது விசா காலாவதியாகும் முன்னரே தான் குடியேற்றத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை புதுப்பிக்க வேண்டி விசாரித்த்தாகவும், குடியேற்றத்துறை அதிகாரிகளும் அவருக்கு புது விசா வழங்கப்படும் என தெரிவித்த்தாகவும், கூறியுள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து பிரியா-நடேசன் தம்பதியினரின் ஒன்று மற்றும் மூன்று வயதுடைய மகள்களின் உடல்நிலை மோசமடைய துவங்கி விட்டதாகவும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், தம்பதியினருக்காக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அந்த இரு குழந்தைகளும் இவ்வருட கிருஸ்துமஸ் பண்டிகையை தடுப்பு காவலில் தான் கொண்டாடப் போகின்றனர் எனவும், அவர்களது மூத்த மகள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவளது நண்பர்களை பிரிந்த துயரத்தில் எப்பொழுதும் தனிமையிலேயே இருப்பதாகவும் இந்த பிரச்சனையில் முதலில் இருந்து தம்பதிகளுக்கு ஆதரவாக இருந்து வருபவரும் தமிழ் அகதிகள் சபையின் செய்தி தொடர்பாளருமான அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
0 Comments