Tamil Sanjikai

சான் பிரான்சிஸ்கோ நகரின் செயின்ட் போனிபேஸ் தேவாலயம் உறைவிடமற்ற ஏழை எளிய மக்களின் உறைவிடம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ளது செயின்ட் போனிபேஸ் தேவாலயம். இந்த தேவாலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கிட்டத்தட்ட 15 வருடங்களாக உறைவிடமற்ற ஏழை எளிய மக்களுக்கு தங்கள் தேவாலயத்தில் தங்கவும், தூங்கவும் இடம் கொடுத்துள்ளார்கள்.தினமும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தேவாலயத்தில் உள்ள நீளமான இருக்கைகளில் தூங்கவும், இளைப்பாராவும் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு ஆலயத்தில் கம்பளங்கள் வழங்கப்படுகிறது.

2004 ஆம் வருடம், தேவாலயத்தின் பாதிரியார் திரு. லூயிஸ் விட்டாலே, சமூக ஆர்வலர் ஷெல்லி குப்பியோவுடன் இணைந்து இந்தத் திட்டத்தை நிறுவினார். இந்த திட்டம் ‘குப்பியோ திட்டம்’ என அழைக்கப் படுகிறது.

குப்பியோ திட்டத்தின் சமூகத்தளத்தில் உள்ள தகவலின்படி,

தேவாலயத்தில் இளைப்பாறுவதற்கு தஞ்சம் தேடி வரும் யாரையும், எந்த ஒரு கேள்வி கேட்காமலும் , எந்த ஒரு படிவத்தில் தகவல்களோ, கையெழுத்தோ வாங்காமல் அனுமதிக்கப்படுவதாகத்தெரிவித்துள்ளார். மேலும் இங்கு வரும் அனைவரையும் வரவேற்று மரியாதையுடன் நடத்தப்படுவதாகவும், வரும் யாரையும் திரும்பி அனுப்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்தில் தொழுகை செய்ய வருபவர்களுக்கு தேவாலயம் 24 மணிநேரம் திறந்தே இருந்தாலும், தேவாலயத்தின் 2/3 இடம் இந்த குப்பியோ திட்டத்திற்கே உரிய இடமாகும்.

செயின்ட் போனிபேஸ் தேவாலயத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்.

வீடு வாசல் இல்லாத மனிதர்களும் நம் சமுதாயத்தின் முக்கியமான ஒரு அங்கத்தினர், வீடு, வாசல் இல்லாத காரணத்தினாலோ அல்லது அவர்கள் ஏழை அல்லது அழுக்கான உடைகள் உடுத்தியிருக்கும் காரணத்தினாலோ ஆலயத்தில் தொழுகை செய்ய வருபவர்களை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என தெரிவிக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளதாக கூறினார்.

பொதுவாகவே வீடற்றவர்கள் தாங்கும் விடுதியென்றாலே அவர்களை ஜெயில் கைதிகளைப்போலத் தான் நடத்துவார்கள் என ஒரு கருத்து நம் அனைவரிடம் உள்ளது. ஆனால் இந்த குப்பியோ திட்டத்தில் உள்ளவர்களிடம் நடந்த கருத்துக்கணிப்பில் 95 சதவீதத்தினர் தங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், பாத்திரமாகவும் உணர்வதாக கூறியுள்ளனர்.

உலகம் எப்பவுமே வீடு வாசலற்றவர்களை அன்புடனோ, பாசத்துடனோ பார்ப்பதில்லை. 2017 வருடம் சியாட்டில் நகரில் வீடற்றவர்கள் கூடாரம் அமைத்துத் தங்குவதை தடுக்கும் விதமாக ரேஸர் கம்பி அமைத்தனர். சான் பிரான்சிஸ்கோ நகரிலும் ரோபோக்கள் மூலம் அவர்களை பயமுறுத்தி துரத்தினார்கள். வீடற்ற ஏழை மக்கள் கூடாரம் அமைத்து தங்குவதை தடுப்பதற்கு அரசாங்கமே பல லட்சங்களை செலவு செய்வதுடன் அவர்களால் ஆன பல முயற்சியும் எடுத்து கொண்டிருக்கும் இந்த உலகில் இப்படி ஒரு திட்டத்தை நிறுவி அதை சிறப்புடன் செயல்படுத்தி வரும் இந்த குப்பியோ திட்டத்திற்கு நம் பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

0 Comments

Write A Comment