Tamil Sanjikai

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14-ஆம் தேதி கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை, அடுத்த மாதம், 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் என்று சபாநாயகர் கரு. ஜெயசூரியா அறிவித்திருந்த நிலையில், ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் ஜே.வி.பி கட்சி சார்பில் அளிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment