Tamil Sanjikai

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தடுக்க நினைக்கின்றனர் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்றது. இந்தப் பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் அதிகப்படியாக வெளியேறுவதற்கு ஆதரவு அளித்திருந்தனர்.

ஆனால், இதுதொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால், பிரெக்ஸிட் நிகழ்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நிகழ்கிறது. வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட ஏதும் வாய்ப்புள்ளதா? எனக் கேள்விகள் எழ, இதுதொடர்பாக பேசிய பிரதமர் தெரெசா மே, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நடைபெறுவதற்கு தடையாக உள்ளனர். நாட்டு மக்கள் பிரெக்ஸிட்-க்கு ஆதரவு அளித்து பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். இதை எதிர்த்து செயல்படுவது சரியாகாது. அதற்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு எல்லாம் நடத்த முடியாது. நமக்கு மூன்று வழிகளே உள்ளனர். ஒன்று சரியான ஒப்பந்தத்துடன் பிரெக்ஸிட், அல்லது ஒப்பந்தம் ஏதும் இன்றி வெளியேறுவது. மூன்றாவது பிரெக்ஸிட் என்பதே வேண்டாம் என ஒதுங்குவது” எனத் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment