Tamil Sanjikai

கேரளாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 15 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு உதவியாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி பால் அந்தோணி (வயது 40) ஆகியோர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல வந்தனர்.

விமான நிலையத்தில் இவர்களது உடைமைகளை மத்திய தொழிற்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா வழிகாட்டியாக வந்த பால் அந்தோணியின் சூட்கேசில் ‘சாட்டிலைட்’ போன் இருந்ததை கண்டுபிடித்து, அதை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சுற்றுலா வந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் துபாய் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பால் அந்தோணியின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை ‘சாட்டிலைட்’ போனுடன் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது பற்றி விமான நிலைய போலீசார், கியூ பிராஞ்ச், உளவுத்துறை, மத்திய தொழிற்படை கொண்ட கூட்டு குழு விசாரணை நடத்தப்படும். அதில் ‘சாட்டிலைட்’ போனில் ஏதாவது பேசி உள்ளாரா? என்று விசாரித்து, தவறு செய்யவில்லை என்றால் ‘சாட்டிலைட்’ போனை பறிமுதல் செய்து, பால் அந்தோணி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments

Write A Comment