Tamil Sanjikai

சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலைப் பார்த்து, ‘‘எழுந்திரு, எழுந்திரு!’’ என்று மத போதகர் ஒருவர் கத்துகிறார். உடனே, இறந்தவர் மெதுவாக எழுந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சரியமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர்.

இந்தக் காணொலி தென்ஆப்பிரிக்காவில் சமீபத்தில்பெர்ம் பரபரப்பையும், சர்ச்சையையும் உண்டாக்கியது.

இது ஒரு நவீன கால அற்புத செயலாக கூறப்பட்டாலும், பலரும் இதை நம்பத் தயாராக இல்லை.

தன்னைத்தானே மதபோதகர் என்று அறிவித்துக் கொண்டுள்ள ஆல்ப் லுகா என்பவர், குறிப்பிட்ட நபர்களை தனது சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் வெளிப்புற இடம் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இறந்தவரை உயிர்ப்பிக்கும் இந்த நிகழ்வு, இணையதளத்தில் கேலி செய்யப்படுவதோடு, கடும் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

‘இவ்வாறான அற்புதங்கள் என்று ஒன்றும் இல்லை. நம்பிக்கை இழந்துள்ள நமது மக்களிடம் இருந்து பணம் பறிக்க புனையப்பட்டு நிறைவேற்றப்படும் முயற்சிகள் இவை’ என்று தென்ஆப்பிரிக்க கலாசார, மத மற்றும் மொழி உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் கலந்துகொள்வோரும் தாங்கள் ஏமாற்றப்படுவதாகக் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் கிங்டம் புளூ, கிங்ஸ்- குயின்ஸ் இறுதிச்சடங்கு சேவை மற்றும் பிளாக் போனிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், தங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக குறிப்பிட்ட மத அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகத் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

சடலத்தைக் கொண்டு செல்ல வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுக்கச் சென்றபோது, கிங்ஸ்- குயின்ஸ் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்துக்கு நம்பகமாகத் தோன்றுவதற்காக பிளாக் போனிக்ஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை தனியார் காரில் ஒட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கிங்டம் புளூ நிறுவனத்திடம் இருந்து சவப்பெட்டி வாங்கப்பட்டதாக, இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யும் குழுவின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினையின் நகைச்சுவையான பக்கத்தைப் பார்த்த தென்ஆப்பிரிக்க மக்கள் பலர், குறிப்பிட்ட ஒரு ‘ஹேஷ்டேக்’கை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கேலியாகப் பதிவிடத் தொடங்கினர்.

தற்போது அந்த மத அமைப்பு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அற்புதத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக செய்தித்தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த உயிர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்ட நாளில், உயிர்த்தெழச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மனிதர், இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பணியிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், அவர் தனது ‘சொந்த’ இறுதிச்சடங்கில்தான் பங்கேற்கப் போகிறார் என்ற உண்மையைக் கூறவில்லை.

0 Comments

Write A Comment