Tamil Sanjikai

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற லேண்ட்ரோவர் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இளவரசர் பிலிப் தனது காரை பிரதான சாலைக்கு எடுத்து வரும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியதாக தெரிகிறது. விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இரண்டு பெண்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர். லேண்ட்ரோவர் கார் சாலையின் ஓரத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையும் விபத்து நடைபெற்றதை உறுதி செய்துள்ளது. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்பட வில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிட்செல் ஒபாமாவுடன் சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அப்போது இளவரசர் பிலிப் இருவரையும் தனது காரில் அவரே ஓட்டிச்சென்று மதிய விருந்துக்கு அழைத்துச்சென்றது நினைவிருக்கலாம்.

0 Comments

Write A Comment