Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 ற்கும் மேலான வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா, ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் ஆதரவோடு முடுக்கி விடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் தங்கள் மண்ணில் இருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் சமாளித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், ‘ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை, இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியது' என்று தெரிவித்துள்ளார்.

முஷரப் மேலும் கூறும் போது, “ஜெய்ஷ் அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பு என்னை 2 முறை கொல்லப் பார்த்தது' என்றார். அப்போது செய்தியாளர், ‘நீங்கள் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது ஏன் ஜெய்ஷ் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை?' என்று கேட்டதற்கு, ‘அப்போது சூழல் வேறு மாதிரி இருந்தது' என பதில் அளித்தார்.

0 Comments

Write A Comment