Tamil Sanjikai

வெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் (The International Monetary Fund ) வழங்க உள்ளது.

பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும், ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருவதாகவும் அந்நாட்டு நிதி ஆலோசகர் அப்துல் ஹஃபீஸ் ஷேக் ((Abdul Hafeez Shaikh)) கூறியுள்ளார். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிநாட்டுக் கடன் பொறுப்பு தொடர்பாக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையின் அளவில் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக பாகிஸ்தான் நிதி ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஐஎம்எஃப்பிடம் இருந்து 6 பில்லியன் டாலர்களையும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 2 முதல் 3 பில்லியன் டாலர்கள் தொகையையும் பாகிஸ்தான் பெற உள்ளதாக அப்துல் ஹஃபீஸ் ஷேக் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment