Tamil Sanjikai

இந்தியாவுடன் ஒற்றுமையாகவும், நட்பாகவும் இருக்க வேண்டுமெனில் பாகிஸ்தான் முதலில் மதச்சார்பற்ற நாடாக மாற வேண்டும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் தாங்கள் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். பல போர்களுக்குப் பிறகும், பிரான்ஸ் - ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைதியாக வாழ முடிகிறது என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தானால் அது ஏன் முடியாது? என அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார். மேலும் சமாதானத்திற்கு இந்தியா ஒரு அடி முன்னெடுத்தால், பாகிஸ்தான் இரண்டடி முன்னெடுக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் புனேவில் நடைபெற்ற ராணுவ பயிற்சி விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத்திடம், இம்ரான் கானுடைய பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் இரு நாடுகளிடையே ஒற்றுமை நிலவ வேண்டுமெனில் பாகிஸ்தான் முதலில் உள்நாட்டு நிலவரங்களில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் தன்னைத் தானே இஸ்லாமிய நாடாக மாற்றிக் கொண்டது. அவர்கள் இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பினால், முதலில் மதச்சார்பற்ற நாடாக மாற வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இஸ்லாமிய நாடு என்று சொல்லிக் கொள்பவர்களுடன் நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும் . பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது என்ற தெளிவான கொள்கை நம்மிடம் உள்ளது என பிபின் ராவத் தெரிவித்தார் .

மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பிபின் ராவத், ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வரை போர் நடவடிக்கைகளில் பெண்களை முன்னிலைபடுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெரிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், ராணுவத்திற்கு வருபவர்கள், பெரிய நகரங்களில் இருந்து மட்டும் வருவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment