அமெரிக்காவில் நடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11, அன்று நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டவர், ஒசாமா பின்லேடன். தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவை நிறுவிய இவர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் மறைந்திருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, அதிரடியாக பாகிஸ்தானில் இறங்கிய அமெரிக்கா, ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றது. அந்தத் தாக்குதலில், ஒசாமாவின் மகனான காலித்தும் கொல்லப்பட்டார். ஆனால், அவரது மற்றுமொரு மகன் ஹம்ஸா ஒசாமா தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்.
தாக்குதலுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் இருந்தவர்களிடம் நடந்த விசாரணையில், ஹம்ஸாவைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களிலும் ஹம்ஸா இல்லை. இந்நிலையில், ‘அல்-கொய்தாமீது கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் ஹம்ஸா உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா நம்புகிறது’ என அந்நாட்டு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பெயர் அறிவிக்காத அந்த அதிகாரி, ஹம்ஸா கொல்லப்பட்ட இடம், நாள் போன்ற வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று என்.பி.சி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில், ஹம்ஸா பின்லேடனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய இரு அதிகாரிகள், “30 வயதான ஹம்ஸா, அல்-கொய்தாவை இயக்கிவந்துள்ளார். தன் தந்தை மற்றும் சகோதரரின் கொலைக்குப் பழி தீர்ப்பதற்காக, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என சமீபத்தில் வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தன் தந்தை கொல்லப்பட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்ஸா பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளார்” என அவர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments