அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வடகொரியா ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு பிறகு வடகொரியா எந்த வித அணு ஆயுத சோதனைகளையும் நடத்தவில்லை. அணு ஆயுத சோதனை தளத்தை அழிப்பதாகவும் வடகொரியா தெரிவித்தது. அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, தென்கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தனது போக்கில் மென்மையை கையாளத் தொடங்கி இருக்கிறது.
அண்டை நாடான தென்கொரியா, அமெரிக்காவுடன் தொடர்ந்து இணக்கமான போக்கை வடகொரியா கடைப் பிடித்து வந்தது. அடுத்த ஆண்டு டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு மீண்டும் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளி வருகின்றன. இந்த சூழலில், வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை நடத்தி வருவதாக கொரிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதி நவீன ஆயுத சோதனை நடைபெற்றதை வடகொரிய தலைவர் ஆய்வு செய்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயுத சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் என்ன மாதிரியான ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
அதி நவீன யுக்தி ஆயுதம் நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், தமது நாட்டின் பாதுகாப்பை யாரும் ஊடுருவ முடியாத வல்லமை பெறவும் நமது மக்கள் ராணுவத்தை வலுப்படுத்தவும் கட்டமைக்கப்பட்டு இருப்பதாகவும் வடகொரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா - தென்கொரியா நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா இந்த சோதனையை நடத்தியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
0 Comments