Tamil Sanjikai

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' அனுசரிக்கப்படும் என அம்மாநிலத்தின் கவர்னர் ராய் கூப்பர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில், தமிழர்கள் அதிக அளவில் வசித்துவருவதுடன் அம்மாநில அரசியலில் முக்கியப்பங்காற்றுபவர்களும் தமிழர்களே. இந்நிலையில், அங்குள்ள தமிழர்கள் சிலர், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக அனுசரிக்கவேண்டும் என அம்மாநில அரசிடம் வலியுறுத்திவந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற அம்மாநில கவர்னர் ராய் கூப்பர், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அனுசரிக்கப்படும் என அறிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளார்கள் எனவும் உலகில் இன்றும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இருக்கும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி, தமிழர்களின் அடையாளம் எனவும், இங்குள்ள தமிழர்களுடன் இணைந்து ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் மொழி அதிகம் பேசப்படும் நிலையில், அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் இதுபோன்று தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் அங்கீகரித்திருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது.

 

0 Comments

Write A Comment