Tamil Sanjikai

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் அங்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் தொடுத்துள்ளன.

இந்த நிலையில் நீரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சம் புகுந்தார். இந்திய அரசின் தொடர் முயற்சியால் இந்த வழக்குகள் தொடர்பாக நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி மற்றும் அவரது கணவர் மையாங் மேத்தா ஆகியோருக்கு சொந்தமான பெவிலியன் பாயிண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்குமாறு அந்த நாட்டின் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வங்கி கணக்கில் ரூ.44 கோடியே 41 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர் ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

0 Comments

Write A Comment