சர்வதேச அளவில் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றது.
இன்டர்போல் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, பிறநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச குற்றச்செயல்களை துப்புத் துலக்குவது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். இந்த அமைப்பின் தலைமை இடம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்டர்போல் காவல்துறை தலைவரான மேங் ஹோங்வேய் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய்நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென்று காணாமல் போனார். இரண்டு மாதங்களாகியும் அவர் என்ன ஆனார்? என்கிற தகவல் ஏதும் கிடைக்காததால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இன்டர்போல் தலைமையகம் தீர்மானித்தது.
இதற்கிடையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக மேங் ஹோங்வேய் ராஜினாமா செய்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பதவிக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரஷியாவின் உள்துறை அமைச்சக உயரதிகாரியும், இன்டர்போல் துணை தலைவராக பதவி வகித்தவருமான அலெக்சாண்டர் பிரோகோப்சுக் நிறுத்தப்பட்டார். இவரை இந்த பதவியில் நியமிக்க பல்வேறு மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துபாயில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கிம் ஜாங்-யாங் தேர்வு செய்யப்பட்டதாக இன்டர்போல் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.
0 Comments