Tamil Sanjikai

மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் மாதம் ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசியிருப்பது கண்டறிப்பட்டது ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாடு தழுவிய விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருப்பதாக சுமார் 100க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன. ஆனால் அதில் சில போலியானவை, சில சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவும் எழுப்பப்பட்டவையாகும். விவசாயிகள் டன் கணக்கான ஸ்ட்ராபெர்ரி பழங்களை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பல்பொருள் அங்காடிகள் ஸ்ட்ராபெரி விற்பனையை நிறுத்தின.

இதுதொடர்பான முதல் சம்பவம் குயின்ஸ்லாந்தில் நடைபெற்றது. ஸ்ட்ராபெரி பழத்தை தின்ற முதியவர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி இருப்பது தொடர்பான அச்சம் முதலில் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவியது பிறகு அது நியூசிலாந்துக்கும் பரவியது. இதன் விளைவாக இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 10-15 வருட சிறைத் தண்டனை என ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment