Tamil Sanjikai

ஆண்டு தோறும் போர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவனான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2018-ம் ஆண்டு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 6 இடங்கள் முன்னேறி 13 வது இடத்தில உள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி 106 இந்திய பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் . விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36-வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் 91-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் பிர்லா (122), அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கவுதம் அதானி (167), பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244), பதஞ்சலி ஆயுர்வேதாவின் இணை நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா (365), பிராமல் நிறுவனங்களின் தலைவர் அஜய் பிராமல் (436), பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா (617), இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி (962) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment