Tamil Sanjikai

துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகிஜி விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் சௌதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது..

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்த ஜமால், துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், அவர் மாயமான விவகாரம், சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியதுடன் அதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் பலரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

இது சவுதிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சவுதியின் அரசு வழக்கறிஞர் கூறுகையில், ஜமால் கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சவுதி அதிகாரிகளுக்கு அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment