Tamil Sanjikai

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தற்போது தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். அமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அடுத்தடுத்த அசுர வளர்ச்சி போன்றவற்றில் மக்கின்சிக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு. ஆனால், அமேசான் நிறுவனத்தில் பங்குதாரராக அவர் இல்லை.

ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும்) ஜெஃப் பெசோஸும்,அவரது மனைவி மக்கின்சியும் தங்களது 25 ஆண்டுகால மணவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக, அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு ஜீவனாம்ச தொகை வழங்க வேண்டும்.

அமெரிக்க சட்டப்படி ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவு, மனைவி மக்கின்சிக்கு உரிமை உள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மக்கின்சிக்குக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கணவர் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள மக்கின்ஸி ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் நேற்று விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதன்படி அமேசான் நிறுவனத்தில் தான் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 75 சதவீதத்தை பெசோஸ் தொடர்ந்து வைத்துக் கொள்வார். அதேசமயம் மீதமுள்ள 25 சதவீதத்தை மட்டும் மக்கின்ஸி பெறுகிறார். இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பெசோசுக்கு 12 சதவீத பங்குகளும், மக்கின்ஸிக்கு 4 சதவீத பங்குகளும் என பிரிக்கப்பட்டுள்ளது.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக மக்கின்ஸி தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி வாஷிங்டன் போஸ்ட் உட்பட மற்ற நிறவனங்களில் உள்ள தனது பங்குகளையும் கணவர் பெசோசுக்கு விட்டுக் கொடுக்க மக்கின்ஸி முன் வந்துள்ளார்.

அமேசான் பங்குகளில் 4 சதவீதம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும். இது, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு விவகாரத்து சொத்து உடன்பாடாக இது கருதப்படுகிறது. இந்த விவகாரத்துக்கு பிறகு அமேசானில் உள்ள பங்குகளின் மூலம் ஜெப் பெசோஸூக்கு உள்ள சொத்து மதிப்பு சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

0 Comments

Write A Comment