இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 35 வெளிநாட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு உத்தரவால், இலங்கையில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன..
தாக்குதல் தொடர்பாக தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக இண்டர்போலின் ஒரு குழுவும் இலங்கை சென்றுள்ளது.
இதனிடையே கட்டுவப்பிட்டியா தேவாலய வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய மனித வெடிகுண்டின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. தோளில் பையை சுமந்து கொண்டு செல்லும் அந்த நபர், தேவாலயத்திற்குள் சென்ற பின்னர் தான் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, செவ்வாய் பிற்பகலில் ஒரு லாரியும், வேனும் வெடிகுண்டுகளுடன் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் பரவின. இதை அடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்யும் படி உத்தரவிடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜேவர்த்தனே, நியுசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் கடந்த மார்ச் மாதம் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே, இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த அமைப்பின் அமக் செய்தி நிறுவனத்தின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ஐ.எஸ். அமைப்பின் பின்னணியில் மிகப் பெரிய குழு ஒன்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
புலனாய்வுத் துறையினரும், உளவுத் துறையினரும் நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, விசாரணைக்காக வெளிநாடுகளின் உதவிகளைக் கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 Comments