Tamil Sanjikai

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உள்பட 300 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ இன்டர்போல் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நண்பர்கள், குடும்பங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை சர்வதேச போலீசார் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment