Tamil Sanjikai

இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்த 125 பயணிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்திற்கு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லயன் ஏர் நிறுவனத்தை சேர்ந்த போயிங் 737 விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் அருகேயுள்ள ஜாவா கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 189 பபயணிகள் பலியானார்கள். கடலில் விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு 200 பைகளில் அடைக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் டாலர் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக லயன் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய போலீஸ் மருத்துவ மையத்தின் தலைவர் ஆர்தர் டம்பி, ‘‘ மீட்கப்பட்டுள்ள உடல்களில் 125 பேருக்கு மரபணு சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 89 பேர் ஆண்கள் என்பதும், 36 பேர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டினர். இதில் ஒருவர் இந்திய விமானி என்பதும் மற்றொருவர் இத்தாலியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார். விமான விபத்துக்கான காரணம் குறித்த முதல்கட்ட அறிக்கை வரும் புதன்கிழமை வெளியாகும் என தெரிகிறது.

0 Comments

Write A Comment