சிட்டிக்குருவி இனம் அழிவதற்கு செல்ஃபோன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள்தான் காரணம் என்றொரு குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் நெதர்லாந்து நாட்டில் செல்போன் கதிர்களால் நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்துக் கொத்தாய் செத்துப் போன புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பறவைகள் உயிரிழந்ததற்கு 5ஜி அலைக்கற்றையின் சோதனை நிகழ்ச்சியே காரணம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது 4ஜி வேகத்தில் பயன்பாட்டில் இருக்கும் சேவையை அதிவேக சேவை மற்றும் துல்லியம் என செல்போனின் தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னெடுப்புகள் குறித்த சோதனை பல நாடுகளில் தீவிரமான நடைபெற்றுவருகிறது, இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் இந்த சோதனையால் ஏற்பட்ட பறவைகளின் மரணம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மேற்கு நெதர்லாந்திலுள்ள ஹாக் (Hague) என்ற நகரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி ஹூகைய்ன்ஸ் பூங்காவில் திடீரென நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து விழுந்தன. அருகில் இருந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவைகள் தங்கள் கழுத்துகளை தண்ணீருக்குள் மூழ்கடித்துக்கொண்டன.
இந்த பறவைகளின் திடீர் உயிரிழப்புக்குக் காரணம் புரியாத நிலையில் பறவை ஆராய்ச்சியாளர்கள், உணவுத்துறை வல்லுநர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் என ஒரு பெரிய குழுவாய் இணைந்து இறந்து போன பறவைகளை ஆய்வுக்குட்படுத்தினார்கள் .
அந்த ஆய்வின் முடிவில் உயிரிழந்த பறவைகள் வைரஸ் தாக்கியோ, நோய்வாய்ப்பட்டோ, விஷத் தாக்குதலுக்காளாகியோ இறக்கவில்லையென்பது முடிவானது. ஆனால் கொத்துக் கொத்தாக பறவைகள் செத்துப் போனதற்கான காரணம் மட்டுமே மர்மமாக நீடித்து வந்தது.
இதனிடையே மருத்துவம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் எரின் எலிசபெத் வலைப்பக்கத்தில், பறவைகள் உயிரிழந்த அதே நேரத்தில் ஹாக் நகரில் 5ஜி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகளே பறவைகளின் மர்ம சாவுக்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறவைகள் உயிரிழந்ததையும், 5ஜி சோதனையையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது.
பறவைகளின் உயிரிழப்புக்கு 5ஜி சோதனைதான் காரணமா என்பதை அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கவில்லை என்றாலும்கூட செல்போன் கதிர்வீச்சுக்கு எதிராக பரப்புரை செய்து வரும் இயற்கை ஆர்வலர்கள் இந்த கட்டுரையை தங்களுக்கு சாதகமான சான்றாக முன்னிறுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி தேவைதான், ஆனால் நம் கண்ணை தொலைத்தா ஓவியம் வாங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றொரு கனமான கேள்வியை முன்வைக்கின்றனர்.
0 Comments